Wednesday, March 28, 2007

RETURN OF NRI

NRI நாளை...


கண்ணிமைக் காட்சிகளில்
கனவுகளும் கற்பனையும்
கவிதைத்துள்ளலாகி
இங்கு வந்த நாட்கள்..

புலம் பெயர்ந்தாவது
பொருளீட்டும் பொறுப்புக்களோடு
பாலைவனச் சுடுமணல்
தொட்ட நாட்கள்..

தங்கையின் மணமென்றும்
தாய்க்குத் தந்தைக்கு வீடென்றும்
தவிப்புகளின் தாலாட்டில்
தாய்நாடு பிரிந்த நாட்கள்..

புலர்கின்ற பொழுதெல்லாம்
மலர்கின்ற அன்னையின் முகம் மறைந்து
அவள் நிழற்படம் மட்டுமே தலைமாட்டில்
நிஜமாகிப்போன அந்த நாட்கள்..

கொஞ்சுமொழிக் கிளுகிளுப்பில்
நெஞ்சமெல்லாம் நிறைந்தவளை
கெஞ்சுகின்ற கண்ணீரில் தவிக்க வைத்து
பஞ்சாகி இங்கு பறந்து வந்த அந்த நாட்கள்..

தத்தித் தவழ்ந்து வந்து முகமெல்லாம்
முத்தமிட்ட மழலைச் செல்வங்களை
பத்திரமாகப் பார்த்துக்க்கொள்ளென
சத்தமில்லாமல் சவுதி வந்த அந்த நாட்கள்..

இன்றோ..

காலம் இழுத்து வந்த
கப்பல் கரையைத் தொட்டுவிட
நாளைய விடியல் நோக்கி
நம் பயணம் தொடர்கிறது.

புதிய சமூகத்தின் தாக்கங்கள்..ஏக்கங்கள்
எதிர்பார்ப்புக்கள்..ஏமாற்றங்களில்
நாம் சேர்த்தவை
செல்வமும் செழிப்பும் என்றால்
தொலைத்தவையோ
இளமையும்.. உறவுகளும்..


எரிந்து போன தியாகத்தின் வெந்தணலில்
விரிந்திருக்கிறது நாளையென்னும் விடிவெள்ளி


தங்கையோ மணம் முடித்து
தாயுமாகிவிட்டாள்
தாயோ மனம் நிறைந்து
தன் வீட்டில் மகிழ்ந்து போனாள்

காலைச் சுற்றி வந்த
கண்மணிக் குழந்தைகளோ
கலிபோர்னியாவின் கணிப்பொறி மையத்திலும்
கடலூர் கந்தசாமிக் கல்லூரியிலும்

தாயகத்தின் மண்ணிலே
தடம் பதிக்கும் இனிமை

சுதந்திரத்திருநாட்டில்
சுவாசிக்கும் முழுமை

பிரிந்துபோன உறவுகள்
இணைந்து போகும் நிறைமை

முடிந்துபோன கனவுகள்
துளிரப் போகும் பசுமை

எழுச்சி பெற்ற இந்தியாவின்
எதிர்காலக் கனவுகளில்
எங்களுக்கும் பங்கில்லையா
இதோ வருகிறோம்
எங்கள் தாய்த்திருநாடே...

வணக்கம்

1 comment:

Anonymous said...

மிக அருமை....
வரிகளையும் கருத்தாழத்தையும் ரசித்தேன்....
வாழ்த்துக்கள்!!!