Monday, October 7, 2013

My Travel Experience in Syria ( Tamil )



பயணக்கதை :

டெமாஸ்கஸ் (சிரியா )
                                                                                                        



    கல்யாண வீட்டுக் கலகலப்பை மிஞ்சுமளவுக்கு சிரிப்பும் அரட்டையுமாக இருந்தது அந்த உணவு விடுதி. குடும்பம் குடும்பமாக ஆண்களும் பெண்களும் குட்டையான மேஜைகளின் முன் வாய் விட்டு சிரித்துக் கொண்டிருக்க வகைவகையான அரேபிய உணவுவகைகளை மிகச் சுறுசுறுப்பாகப் பரிமாறிக் கொண்டிருந்தார்கள் பணியாளர்கள். மூலையிலிருந்த இளைஞர் கூட்டமொன்று அரேபியப் பாடலொன்றுக்குப் பலமாகக் கைதட்டிக்கொண்டிருந்தது.

அழகுப்பதுமைகளாக அரேபியப்பெண்கள். சிலர் ஜீன்ஸ், டி ஷர்ட்டுடன் ஐரோப்பியர்களைப் போல உடையணிந்திருந்தாலும் பெரும்பாலான பெண்கள் கறுப்பு அபயா ( பர்தா ) அணிந்திருந்தார்கள். யாரும் முகத்தை மட்டும் மூடுவதில்லை. ஆண்கள், பெண்கள் இருவருமே நல்ல சிவந்த நிறம்.

“ இங்கே ஒரே சமயத்திலே அறுநூறு பேர் சாப்பிடலாம். அப்படியும் ரிஸர்வ் செய்யாவிட்டால் ஒருமணி நேரம் காத்திருக்கணும். டெமஸ்கஸிலேயே சிரியன் வகை அரேபியச் சாப்பாடு இங்கேதான் ரொம்பச் சுவையாக இருக்க்கும். என்ன, சி. ஜே. பிடிச்சுருக்கா ? “

பக்கத்திலிருந்த நண்பர் ஹோம்ஸி அரைகுறை ஆங்கிலத்தில் கேட்டபொழுது ‘ பாபாகனுஜ் “ என்ற சுட்ட கத்திரிக்காய் மசியலை குப்ஸில் ( நம்மூர் தந்தூரி ரொட்டி ) நனைத்து சுவைத்தவாறே “ பிரமாதம் “ என்று சொன்னேன். சிதம்பரம் பக்கம் நடராஜர் கோவிலைச் சுற்றியுள்ள ஹோட்டல்களில்  இட்லிக்குத் தொட்டுக்க கொத்சு தருவார்கள். அதே போன்ற சுவை.

                           
 சிரியாவில்  உணவை ஆர்டர் செய்யும்பொழுது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இல்லையென்றால் எடை தாங்காமல் டேபிள் விழக்கூடிய அளவுக்கு வகை வகையான உணவு வகைகளை  நிரப்பிக் கொண்டே போவார்கள்.

எங்கள் முன்னாலிருந்த இருக்கைகளில் மலர்க்கூட்டமென இளம்பெண்கள் சிலர் வந்தமர்ந்தார்கள். கல்லூரிப் பெண்களுக்கேயுரிய கலகலப்பான அரட்டை. அந்தக் கூட்டத்திலேயே நான் மட்டுமே இந்தியன் என்பதால் எல்லோருடைய பார்வையும் என்னைச் சற்று சுவாரஸ்யமாகப் பார்ப்பது புரிந்தது.

சிரியாவிற்கு இந்தியர்கள் வருவதே மிகவும் குறைவாம். மற்ற அரபு நாடுகளைப் போல இரு நாடுகளுக்கிடையே வணிகப் பரிமாற்றமோ, பண்பாட்டுப் பரிமாற்றமோ அதிகமில்லாததே இதற்கான காரணமாக இருக்கலாம்.

திடீரெனெ எதிரிலிருந்த இளம்பெண்கள் என்னைச் சுட்டிக்காட்டி சிரித்த காரணம் புரியாது நான் பக்கத்திலிருந்த எங்கள் கம்பெனியின் சிரியன் கிளை பர்சனல் மேனேஜரான பாத்திமாவைப் பார்த்தேன்.

  ஒண்ணுமில்லே மிஸ்டர் சி. ஜே. நீங்க இந்தியரான்னு கேட்டாங்க.. ஆமாம்னு சொன்னேன். அவங்களுக்கு உங்க இந்தி சினிமான்னா ரொம்ப உயிராம். உங்களை ஒரு பாட்டுப் பாடச் சொல்றாங்க.. “
அமெரிக்காவில் எம்.பி.ஏ பட்டம் பெற்று நண்பர் ஹோம்ஸியிடம் பணிபுரியும் பாத்திமா மொழிபெயர்த்துச் சொன்னார்.

  பாட்டா..அதுவும் முன்பின் தெரியாத எல்லோர்முன்னால்..அதுவும் இப்படி உணவு விடுதியிலா….. “


-     
நமது இந்தியர்களுக்கேயுரிய தயக்கம்…கூச்சம்.

  அப்ப..நாங்களே பாடவா..உங்க ஷாருக்கானை எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். சூப்பர் ஹீரோ.  ஆமா.. முஜே தும்ஸே ப்யார் ஹோகயான்னா என்ன அர்த்தம் ? “

“ எனக்கு உன்னிடம் காதல் வந்துவிட்டது ன்னு அர்த்தமாம்.. “

பாத்திமா அரபியில் அவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொல்ல கொல்லென்ற சிரிப்புடன் “  முஜே தும்ஸே ப்யார் ஹோகயா “ ன்னு அந்த இளம் சிட்டுக்கள் என்னைப் பார்த்துப் பாடத் தொடங்க அந்த இடமே கலகலப்பாகியது. மொழிபுரியாவிட்டாலும் வயதான மூதாட்டிகள்கூட கைகொட்டிப் பாடலை ரசித்தார்கள்.

சென்னை சரவண பவனில் ஏதோ பள்ளியிறுதி வகுப்புத் தேர்வெழுதும் மாணவர்களைப் போல, சைலன்ஸ் ப்ளீஸ் போர்டிற்கு மதிப்புக் கொடுத்து  அமைதியாகச் சாப்பிட்டு எழுந்து வரும் நமது கட்டுப்பாடு நினைவில் வருகிறது.

கவலைகளை மறந்து கொஞ்சநேரமாவது கலகலப்பாகிப்போனால் நெஞ்சத்து இறுக்கங்கள் தளர்ந்து உடல் ஆரோக்கியம் கூடுமாம். நாமும் முயற்சி பண்ணலாமே..

சாப்பிட்டு எழுந்தபொழுது பெண்கள் ஒவ்வொருவராக வந்து கை கொடுத்து டாடா சொல்லிப் போனார்கள்.

வெளியே-----
இரும்புக்கூரை வேயப்பட்ட ஹமீதியா சூக்கென்னும் கடைத்தெரு நிரம்பி வழிந்துகொண்டிருந்தது.


                         வகைவகையான துணிக்கடைகள், வாசனைத் திரவியங்கள், ஆலிவ், உலர்ந்த திராட்சை, குங்குமப்பூ, சிரியாவின் புகழ்பெற்ற இனிப்பு வகைகள், ரத்தினக் கம்பளங்கள்., சிரியாவின் தந்த வேலைப்பாட்டு நகைப்பெட்டிகளென கடைகள் முழுவதும் பொருட்கள்..

  சி.ஜே.  இந்த ஹமீதியா சூக் கடைத் தெரு வெளிநாட்டுப் பயணிகளுக்கு  வரப்பிரசாதம். விலையுயர்ந்த கம்பள விரிப்புகளிலிருந்து சிரியாவின் உயர்ந்த ரக பட்டுதுணிகள் வரை இங்கே கிடைக்கும். இப்படியே நேராகப் போனால் ஒமாயத் மசூதி  ( Omayyad Mosque ) வரும். இந்த மசூதி சிரியாவின் வரலாற்றை மட்டுமல்ல மனித சமுதாயத்தின் வரலாற்றையே இன்றைக்கும் பிரதிபலிக்கும் முக்கியமான இடம். கட்டாயம் பார்க்கவேண்டிய வரலாற்றுச் சான்று. வாங்க போகலாம். “

அமெரிக்கப் பட்டப்படிப்பு முடித்து சிரியா வந்துவிட்ட பாத்திமா சரளமாக ஆங்கிலம் பேசியது எனக்கு உதவியாக இருந்தது. வெறும் அரபி மொழிமட்டுமே பேசும் சிரிய நாட்டு இஞ்சினியர்களைத் தேர்ந்தெடுக்க பாத்திமா மொழிபெயர்த்து உதவ நியமிக்கப் பட்டிருந்தார். சிநேகாவைப் போலக் கண்ணாடி வளையல்கள் குலுங்கும் சிரிப்பு. கண்ணிமைகளில் கூட எட்டிப் பார்க்கும் புன்னகை… ஆனால் அந்தப் புன்னகையின் பின்னால் ஏதோவொரு சோகம் தளும்பித் தவிப்பதை என்னால் உணர முடிந்தது. என்னவாக இருக்கும் ?

“ என்ன சி .ஜே. மலைத்துப் போயிட்டீங்க..இதுதான் ஒமயத் மசூதியின் வாசல். உள்ளே போகலாமா .. “


நண்பர் ஹோம்ஸி சிரித்துக் கொண்டே கையைப்பிடித்தார்.


 கிழக்கு வாயிலிலிருந்த முகப்பு, சிதைந்து போன நமது செஞ்சிக் கோட்டையை நினைவுபடுத்தியது.இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஜூபிடர் தெய்வத்திற்கு ரோமர்கள் கட்டிய கோயிலின் நுழைவு வாயிலாம் அது.

: சி. ஜே.  இந்த மசூதிக்கு நிறைய வரலாறுகள் உண்டு. 5000 ஆண்டுகளுக்கு முன்னால் ஹதாத் என்ற தெய்வத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்ட கோயிலாக இருந்து பின்னர் ரோமர்கள் ஆட்சியில் ஜூபிடர் தேவதையின் கோயிலாக விரிவுபடுத்தப்பட்டது. சிரியாவுக்கு கிறித்துவம் வந்தபோது ஜூபிடர் கோயில் செயின்ட் ஜானின் சர்ச்சாக

மாற்றப்பட்டது. பின்னர் அரேபியாவில் இஸ்லாம் தோற்றுவிக்கப்பட்ட சமயம், உமயத் இஸ்லாமியப் பேரரசு கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சிரியாவைக் கைப்பற்றி, செயின்ட் ஜான் சர்ச்சை உமயத் மசூதியாக மிகப் பிரம்மாண்டமாக மாற்றியமைத்தார்கள். அப்பொழுது கிறித்துவர்களும் இஸ்லாமியர்களும் அருகருகே தொழுது வந்தார்களாம். இந்த மசூதி கட்டப்படும்பொழுது எழுதப்பட்ட கணக்கு வழக்குகளைச் சுமக்க மட்டும் சுமார் ஐம்பது ஒட்டகங்கள் தேவைப்பட்டதாம். வாங்க.. உள்ளே போய்ப் பார்க்கலாம்.  

உலகின் மிகப்பெரும் மதங்களாகக் கருதப்படும் கிறித்துவம் ,இஸ்லாம், யூத மதம் மூன்றுமே சொந்தம் கொண்டாடும் இறைவனால் வாக்களிக்கப்பட்ட புனித பூமி ( Promised Holy Land ) யாகக் கருதப்படும் பாலஸ்தீனிய நாடு, அருகிலுள்ள லெபனான், யூதர்களின் தனி நாடான இஸ்ரேல், இஸ்லாமிய ஜோர்டான் எல்லாமே ஒரு காலத்தில் சிரியப் பேரரசின் ஆட்சியில் இருந்தவை. ஷாம் ( SHAM ) என்ற பெயரில் அழைக்கப்பட்ட சிரியாவின் இந்தப் பகுதி பெரும்பாலும் பாலைவனப் பகுதியாகவும் ,மணற்குன்றுகளாகவுமே இருக்கிறது.


இறைத் தூதர்களான ஆபிரகாம், மோஸஸ், ஏசு கிறிஸ்து, ஜோஸப், சாலமன் – அனைவரும் வாழ்ந்து ஏக இறைவனின் நம்பிக்கையைப் போதித்த பகுதி சிரியா. இறைத் தூதர் முகமது நபி மக்காவிலிருந்து வியாபாரம் செய்ய ஒட்டகங்களில் பயணம் செய்த இடமும் சிரியாதான். எனவே ஷாமென்ற சிரியா எல்லா இறைத்தூதுவர்களின் காலடிகள் பட்ட புண்ணிய இடமாகக் கருதப்படுகிறது.

“ சி.ஜே.  இதோ மசூதியின் இந்த மினாராக் கம்பத்தைப் பார்த்தீர்களா..இதற்குப் பெயர் ஏசுவின் மினாரா ( MInarat Esa )  உலகத்தின் இறுதி நாளன்று ஏசு பெருமான் இந்த மினாரா வழியாக மீண்டும் தோன்றுவாரென்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. இஸ்லாமியர்களுக்கு ஏசு பெருமானும் மதிக்கத்தகுந்த இறைத்தூதரென்று உங்களுக்குத் தெரியுமல்லவா..  


நான் அந்த மினாராக் கம்பத்தைப் பார்த்தேன். ஒரே இறை நம்பிக்கையுள்ள இரண்டு மதங்கள் , CLASH OF CIVILISATION – நாகரீக மோதல் என்ற பெயரில் சந்தேகமும் வன்முறையுமாக மோதிக் கொண்டு மடியும் உலகில் மத ஒற்றுமையின் கலங்கரை விளக்கமாக அந்த மினாரா என் கண்களுக்குத் தெரிந்தது. ஏசு  மீண்டும் இந்த மினாரா மூலம் இறங்கிவரும் வரை இந்த மோதல்களும் இரத்த ஆறும் தொடரத்தான் வேண்டுமா ..  

உள் நாட்டுக் கலவரங்களால் கொந்தளித்துக் கொண்டிருக்கும் சிரியாவைப் பற்றிய சின்ன வரலாற்றுப் பின்னணியைத் தெரிந்து கொள்வது பயனாக இருக்கும்.

 சிரியா—உலக வரலாற்றில் மொஹஞ்சதாரோ, நைல் நதி நாகரிங்களுக்கொப்பான மிகப் பழமை வாய்ந்த நாடு. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு சுமார் 5000 ஆண்டுகளின் வரலாற்றுச் சுவடுகளை இன்னமும் தாங்கிக்கொண்டு உயிர்த்துடிப்புடன் இருக்கக்கூடிய ஒரே
நகரம் சிரியாவின் தலைநகரமான டெமாஸ்கஸ். பழைய நாகரிங்களின் பெரும்பாலான தலைநகரங்களும் சரித்திர நகரங்களும்  வலுவிழந்தும் ஒரேயடியாக காணாமற் போயுமுள்ள நிலையில் இன்றளவும் உயிரோட்டமாக உள்ள ஒரே நகரம் டெமாஸ்கஸ்தான் என்று வரலாற்று அறிஞர்கள் பாராட்டுகிறார்கள். இந்த நாகரிகத்தைப் பற்றி இந்தியர்களான நமக்கு அதிகமாகத் தெரியாதது வருத்தமான விஷயம்தான்.

மிருக வேட்டையிலிருந்து கற்கால மனிதன் விவசாயத்திற்கு மாறிய காலக்கட்டத்தில் (  9000 BC ) பரதா என்ற சிரியாவின் ஆற்றுப்படுகையும் , பக்கத்திலுள்ள யூப்ரடீஸ் டைகரீஸ்  நதிக்கரைகளும்தான் மனிதனின் நாகரீகத் தொட்டில்களாக வர்ணிக்கப்படுகின்றன. பரதா என்ற நதிக்கும் பரதம் என்ற நமது நாட்டிற்கும் ஏதாவது தொடர்புண்டா என்று வரலாற்று மாணவர்கள் ஆய்வு செய்யலாம்.


முதன் முதலாக  கி.மு 1200 லேயே உலகிற்கு எழுத்துருவத்தைக் கொடுத்ததும் சிரியா நாகரிகம்தான். இயற்கையான அரண்களில்லாததால் சிரியாவும் அதன் தலைநகரமான டெமாஸ்கஸும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சாம்ராஜ்ஜியப் படையெடுப்புகளால் தொடர்ந்து சின்னாபின்னமாக்கப்பட்டன. கிறிஸ்துவிற்கு முன்பு ஆர்மீனிய , பாரசீக, ரோமாபுரிச் சாம்ராஜ்ஜியங்களும் எகிப்து மற்றும் அலெக்ஸாண்டரின் கிரேக்கப் பேரரசும் சிரியாவைத் தாக்கித் தன் வசமாக்கின. பிறகு நூறு கிலோமீட்டரருகேயுள்ள பாலஸ்தினியத்தில் கிறிஸ்து பிறந்த பிறகு மதங்களின் பெயரால் படையெடுப்புகள் தொடர்ந்தன.
                        

சிரியா உருவ வழிபாட்டிலிருந்து கிறித்துவ மதத்திற்கு மாறியது. பிறகு பக்கத்திலுள்ள அரேபியாவில் இஸ்லாமிய மதம் தோன்றி , காலிப் அலியின் மறைவிற்குப் பிறகு , இஸ்லாமியத் தலைநகரை மதினாவிலிருந்து  டெமாஸ்கஸிற்கு மாற்றியவர்கள் உமயத் பேரரசர்கள். கி.பி 700 ல் சிரியா இஸ்லாமியர்கள் வசமாகிய பின் மதவெறுப்பின் அடிப்படையில் சிலுவைப் போர்களை ஐரோப்பியர்கள் தொடங்கினர். துருக்கியர்களின் ஒத்தமான் பேரரசு , பிறகு ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் என வரிசையாக சிரியா ஆதிக்க அரசுகளின் கைப்பிடியில் சிக்கிய பிறகு 1946 ல் சுதந்திரம் பெற்றது. மக்களாட்சிக்கு மாறாக சோவியத் யூனியனின் ஆதரவுடன்  அடக்குமுறை அதிபர்களின் கைகளில் அதிகாரம் மாறியது. அரபு நாடுகளின் மக்களெழுச்சி சிரியாவிற்கும் பரவி அதிபர் சதாத்திற்கெதிராக வன்முறை ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.

ஒமயத் மசூதியில் தொழுகைக்கு வருபவர்களைவிட சுற்றுலாப் பயணிகளே நிரம்பியிருந்தனர். மசூதிக்குள்ளே இரண்டு முக்கியக் கல்லறைத் தலங்களிருந்தன. கிழக்கு மூலையில் இறுதி இறைத்தூதரான முகமது நபி ( ஸல் ) அவர்களின் பேரரும் இன்றைய ஈராக்கிலுள்ள கர்பலா மைதானத்தில் தன் உயிரைத் தியாகம் செய்தவருமான ஹஜ்ரத் ஹுசைன் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையிருக்கிறது. ஷியா பிரிவைச் சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு இது மிகவும் புனிதமான திருத்தலம். சென்னை திருவல்லிக்கேணிப் பகுதியில் மொகரம் பண்டிகையின்போது இரத்தம் சொட்ட சொட்ட இரும்புச் சங்கிலியால்  மார் தட்டிக் கொண்டு ஷியா பிரிவினர் ஊர்வலம் போவதைப் பார்த்திருக்கலாம். ஹஜரத் ஹுசைன் கர்பலாவில் செய்த உயிர்த் தியாகத்தை நினைவு கூர்ந்து துக்கப்படும் ஊர்வலமிது.    ஒமயத் மசூதியின் இந்தக் கல்லறைக்கருகே உடல் முழுக்க பர்தா அணிந்த ஈரான், ஈராக்கைச் சேர்ந்த  பெண்கள் கண்ணீருடன் கையேந்தி பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.
                       மசூதியின் நடுவில் பச்சை நிறத்தில் தங்க அலங்காரங்களோடு இருந்த இன்னொரு கல்லறையின் வரலாற்றை அறிந்தபொழுது ஆச்சர்யமாக இருந்தது. இயேசு நாதருக்கே முதன்முறையாக ஞனஸ்நானம் செய்துவைத்தவரும் இயேசுவாலேயே இறைவனின் நேசப்பிரியர் என்று மதிக்கப்பட்டவருமான ஜான் தி பாப்டிஸ்ட்  (  JOHN THE BAPTIST ) ன் கல்லறைதானது என்ற தகவல்கள் வியப்பைக் கொடுத்தன.

இஸ்லாமிய வரலாற்றில் அருள்மிகு ஜான் இறைத்தூதர் யாஹ்யா ( YAHYA ) என அழைக்கப்படுகிறார். பிள்ளை பிறக்கமுடியாத முதுமையிலும் ஜக்கிரியாவிற்கு யஹ்யாவை மகனாகக் கொடுத்த அல்லாஹ்வின் கருணையை நினைவு கூறுமாறு திருக்குரான் கூறுகிறது. இவர் இயேசு நாதருக்கு ஞானஸ்நானம் செய்வித்த இடம் பக்கத்து நாடான ஜோர்டானின் தலைநகரான அம்மானின் அருகிலிருக்கிறது. மறைந்த போப்பாண்டவர் இந்தக் கல்லறைக்கு வந்து பிரார்தனை செய்திருக்கிறார். இஸ்லாமிய மசூதிக்கு ஒரு போப்பாண்டவர் வந்து பிரார்த்தனை செய்தது இதுவே முதல் தடவையாம்.  ஏசு பிறந்த சமயம் சிரியாவை ஆண்டு கொண்டிருந்த சர்வாதிகார மன்னன் ஹிராட் பக்கத்து நாட்டு அரசியிடம் மையல் கொண்டு திருமணம் முடிக்க இருந்ததை புனிதமிகு ஜான் எதிர்த்தாரென்பதால் அவருடைய தலையை வெட்டிக்கொண்டு வர அரசி செய்த சூழ்ச்சியில் புனிதமிகு ஜான் இறந்ததாக வரலாறு.  துருக்கிய ஒத்தமான் மன்னர்கள் ஒமயத் மசூதியை விரிவுபடுத்தியபொழுது புனித ஜானின் தலையையும் கூட இருந்த குறிப்பையும் கண்டெடுத்து மசூதிக்குள்ளேயே கல்லறைத்தளம் அமைத்து விட்டார்கள். இரண்டு மதங்களின் பிரார்த்தனைக் குரல்களையும் இணைக்கும் புனிதமான இடம் ஒமயத்.

  மசூதியை விட்டு வெளியே வந்தால் தி நகர் ரங்கநாதன் ஸ்டைலில் ஹமீதியா சூக் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. எதிரே வருவோரோடு மோதாமல் நடப்பது கடினம். தந்தம் மற்றும் முத்துச்சிப்பிகளை மரப்பலகைகளில் பதித்து மொஸைக் டிசைன்களால் அலங்கரிக்கப்பட்ட விதவிதமான மரச் சாமான்கள் சிரியாவின் தனிச்சிறப்பு. சிரியாவின் நினைவாக இந்த கைவினைப் பொருட்களில் எதையாவது வாங்காமலிருக்கமுடியாது.

நண்பர் ஹோம்ஸி தந்த மர டிரேயொன்றை வாங்கி எனக்குப் பரிசளித்தார்.

  ஹோம்ஸி..எங்கு பார்த்தாலும் துருக்கிக் குளியலறைகள் ( TURKISH BATHS ) என்று போர்டு தொங்குகிறதே .. சாதாரணக் குளியலுக்கு ஏனிந்த அலங்கார விளம்பரங்கள்? 

ஹோம்ஸி கண் சிமிட்டி சிரித்தார்.

:  ஓ.. இதுவரை நீங்க டர்கிஷ் பாத் எடுத்ததில்லையா..வாங்க..போய்ப் பார்ப்போம். அது தனி அனுபவம். ஏழாவது நூற்றாண்டின் நூர்தீன் ஹமாம் ரொம்பப் பிரசித்தி பெற்றது. துருக்கிக் குளியலறைகளில் முதலில் நம்மை மிதமான நீராவிக் குளியலில் வேர்க்க வைத்து , உடலை நன்றாகத் தேய்த்து, வாசனை திரவியங்களைத் தடவி, மசாஜ் செய்து, எலும்பு ஜாயிண்ட்களை சொடுக்கெடுத்து , திடீரென ஜில்லென்ற ஐஸ் நீரில் மூழ்கடித்து... “

அவர் சொல்லச் சொல்ல நான் உள்ளே போகாமல் திரும்பினேன்.

..கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குளித்து முடித்து துருக்கி டவலோடு ஏலக்காய் போட்ட சூடான துருக்கிக் காபியை சுவைக்கும்பொழுது உடலும் மனமும் லேசாகிப் போகும் சி ஜே.. வாங்க  ட்ரை பண்ணுங்க.. “
சிரியா துருக்கிய ஆளுகையிலிருந்ததால் துருக்கியப் பழக்கங்கள் இன்னமும் மாறவில்லை. பாங்காக்கின் மஸாஜ் பார்லர்களைப்போல
துருக்கிக் குளியலறைகளிலும் கவர்ச்சிக் கண்ணோட்டம் நிறைந்துவிட்டதால் கொஞ்சம் ஜாக்கிரதை தேவை.

சிரியாவில் இனிப்பு வகைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இத்ற்கென்று தனி மார்க்கெட்டே இருக்கிறது.  பாலாடையும், நெய்யில் வறுக்கப்பட்ட சேமியாவும் , பாதாம் பிஸ்தாவும் கலந்து தயாரிக்கப்பட்ட குனாபா  மேல் சர்க்கரைப் பாகை ஊற்றி பாதையோரங்களிலும் மக்கள் சாப்பிடும்பொழுது நமக்கும் நாவில் நீருறும்.

இத்தனை எளிமையான குடும்பப்பாங்கான கலகலப்பான மக்களிடையே வெடித்திருக்கும் உள்நாட்டுப் புரட்சியைப் பயன்படுத்தி அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இந்த மனித நாகரிகத் தொட்டிலின் மேல் ஏவுகணைகளை வீசத் தயாராவதைக் கற்பனை செய்தாலே நெஞ்சில் இரத்தம் கசிகிறது. இதைப் பற்றி யாரிடமாவது பேசமாட்டோமாவென்று நினைத்தபொழுதுதான் இரவு விருந்தின் போது நண்பர் அப்துல் ரசாக் என் கவலையைப் பகிர்ந்து கொண்டார்.

சோவியத் ஆதரவிலேயே இருந்து பழக்கப்பட்டுவிட்டதால் இங்கே ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பது உண்மைதான் சி. ஜே. ஈராக் சதாம் ஹுஸைனின் பழைய பாத் கட்சிதான் இங்கேயும் ஆட்சி நடத்துகிறது. இது ஒருவகை ராணுவ ஆட்சிதான்.மதத் தீவிரவாத இயக்கங்கள் இல்லாமலில்லை.
                         ஆனால் மக்கள் பொதுவாகவே அமைதியானவர்கள். ஆட்சி புரிபவர்களின் தவறுகளுக்காக அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் பாவத்தை மேலை நாடுகளும் இந்தத் தற்கொலைவாதத் தீவிரவாதிகளும் ஆப்கனிஸ்தான், ஈராக் என்று தொடங்கி இப்பொழுது சிரியாவிற்கும் வந்துவிட்டார்களே என்பதுதான் எங்கள் கவலை…
இரவு விருந்திற்காகப் புதிதாகத் திறக்கப்பட்ட இந்தியா கேட் என்ற மிகப் பெரிய திறந்தவெளி உணவுவிடுதியில் அமர்ந்திருந்தபொழுதுதான் அப்துல் ரசாக் மனம் திறந்தார். இந்தியக் கலாச்சாரத்தை மதித்துத் திறக்கப்பட்ட உணவுவிடுதியாம். அரேபிய இசைக் கருவி  தம்பூரில் மெல்லிய இசை அலைபாய . ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக உணவு விடுதியே களை கட்டியிருந்தது. இருக்கைகளில் அமர்ந்ததுமே ஹூக்கா எனப்படும் புகையிலைக் குழாய்களைக் கொண்டுவந்து அதற்கான நெருப்புத் துண்டங்களைப் பொறுக்கியெடுத்து குழாயின் மேல்பகுதியில் வைத்துவிட்டுப் போகிறார்கள். குளிர் அதிகமாக இருந்ததால் மேலே கம்பளிச் சால்வையைப் போர்த்தி விடுகிறார்கள்.  ஸ்வெட்டர் அணிந்தும் குளிர் நடுக்கியது.

பக்கத்திலிருந்த பாத்திமா கொஞ்சம் பதட்டமாக இருப்பதாகப்பட்டது. அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

மனதில் அரித்துக் கொண்டிருந்த சந்தேகத்தைப் பாத்திமாவிடம் கேட்க இதுதான் சரியான வாய்ப்பு என்று தோன்றியது.

  பாத்திமா… ஏதாவது ப்ராப்ளமா ? “

    நோ..நோ..வீட்லே பசங்க தனியாக இருக்காங்க.. “

   ஓ.. அவங்க அப்பா கூட இல்லையா ? “

  அப்பா…. “

    பாத்திமாவின் கண்களில் நீர் முட்டியதும்தான், நான் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கக்கூடாதோ என்று தோன்றியது.

:  என் கணவர் விவாகரத்து செய்து நான்கு வருடங்களாகிவிட்டன. நாங்கள் இப்போ தனியாகத்தானிருக்கிறோம். வாழ்க்கை ரொம்பவும் குரூரமானது சி. ஜே….. “

என் நெஞ்சில் வேல் பாய்ந்த வேதனை.

கள்ளங்கபடில்லாது கலகலப்பாகப் பழகும் இந்த அழகான மனைவியை ஒதுக்கிவிட்டு ஓட அந்தக் கணவனுக்கு எப்படி மனம் வந்திருக்கும் ? அதுவும் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையானபிறகு …

பொதுவாகவே அரபு நாடுகளில் இந்த விவாகரத்துப் பிரச்னை பெரிய சமூகப் பாரமாகிவிட்டது. சமயத்தின் நெளிவு சுளிவுகளில் புகுந்து தங்கள் சுய நல இச்சைகளுக்காகத் தடம் புரளும் ஆண்களினால் பெண்களும் குழந்தைகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது அரேபிய
சமூகத்தின் பெரிய சமுதாயத் தலைவலி.

“ நோ.. பாத்திமா. உங்க துக்கம் எனக்குப் புரிகிறது. ஆனா வாழ்க்கை குரூரமானதில்லை. உங்களைப் போன்ற படித்தவங்களே மனம் தளரலாமா? கால்களுக்குச் செருப்பில்லையே என்று கவலைப் பட்டேன், கால்களேயில்லாத முடவனைப் பார்க்கும்வரை..என்று எங்கள் கவிஞர் பாடியிருக்கிறார். “

  அப்படியா..உங்க நாட்டில் வாழ்க்கையை இவ்வளவு பக்குவமாகவா எடுத்துக்கிறீங்க..? 

                         


 “ யெஸ் பாத்திமா…எங்க பண்பாட்டின் ஆதாரமே இதுதான். பசங்களை நல்லாப் படிக்க வையுங்க..அதுவே உங்க வெறுமையையும் வெறுப்பையும் மாத்திடும். 

பாத்திமா என்னை நம்பமுடியாமல் பார்த்துச் சிரித்தார். அந்த சிரிப்பில் கண்ணீர் தெறித்தது.

மறுநாள் சிரியாவிலிருந்து ஜோர்டானுக்கு காரிலேயே போகலாமென்று முடிவு செய்து டாக்ஸியொன்றில் பயணமானபொழுது பாத்திமாவும், ஹோம்ஸியும் கையசைத்து விடைகொடுத்தார்கள்.

பாத்திமாவின் கண்களில் நன்றி கலந்த சிரிப்பு.

மீண்டும் ஓர் உறவுக்கு விடைகொடுக்கிறேன்.

                  ---------------------------------------------