இந்திய இறையாண்மையும் இஸ்லாமிய சமுதாயமும்..
சி .ஜே.ஷாஜஹான்
இஸ்லாமியர்களின்
புனித மாதமான ரம்ஜான் பிறை பார்த்தலுடன் தொடங்கிவிட்டது.
வைகைறையிலிருந்து சூரியன் மறையும் மாலை வரை உண்ணாமல், தண்ணீர்கூட
குடிக்காமல் , ஆண்களும்
பெண்களும் நோன்பிருந்து இரவு நேரத் தொழுகையில் ஈடுபட்டிருக்கும் மாதம். முஸ்லீம்களின் இறை வேதமான திருக்குரான்
வானவர் ஜிப்ரீல் மூலமாக
நபிகள் நாயகத்திற்கு மதீனாவிலும் மக்காவிலும் அருளப்பட்ட புனித மாதம். பள்ளிவாசல்கள் இரவுநேரங்களிலும் நிரம்பி வழிகின்றன.
மறுமை வாழ்விற்காக
மட்டுமே எப்பொழுதும் கையேந்தும் கைகள், இன்று இலங்கை குண்டு வெடிப்பினால் ஏற்பட்டிருக்கும் சமுதாய எதிர்மறைத் தாக்கம்
, இன்னும் சில நாட்களில் வெளிவரப்போகும் மக்களவைத் தேர்தல் முடிவுகளினால்
ஏற்படப்போகும் சமூக எதிர்வினைகள் பற்றிய கவலை சூழ்ந்த அச்சம் காரணமாக இன்னொரு எதிர்பார்ப்பையும் தங்கள் இறைவனிடம் முன் வைப்பதை இந்தியா முழுவதும் உணரமுடிகிறது.
நாடு விடுதலையடைந்த
இந்த எழுபத்தியிரண்டு ஆண்டுகளில் இந்து-
முஸ்லீம் மதக் கலவரங்கள் ஆங்காங்கே வெடித்தபோதிலும் இந்திய இறையாண்மை
இன்று போல் என்றும் வலுவிழந்ததில்லை. பெரும்பாலான கலவரங்கள் வட
இந்தியாவில் குறிப்பாக உத்தரப்பிரதேசம், பிஹார், மத்தியப் பிரதேச மாநிலங்களில் உருவாகி அந்தந்த மையங்களில் அடங்கிப் போனதுதான்
உண்மை. ஆனால் இன்றோ நிலைமை வேறு. நேரிடை வன்முறையைவிட , உணர்ச்சிகளின் உளவியல் வன்முறை , இந்த இரண்டு சமுதாயங்களுக்கிடையே
அகழிகளைத் தோண்டி , போர்க்கள சூழ்நிலையை உருவாக்கியிருப்பது இந்திய
இறையாண்மைக்கு மிகப் பெரும் சவால். நேற்று வரை அண்ணன் தம்பிகளாகப் பழகியவர்கள்
சமூக வலை தளங்களில் எதிரிகளாகத் தாக்கிக் கொள்வதைப்
பார்க்க வேதனை மிகுகிறது. வடக்கில் தொடங்கிய இந்த நச்சுக் காற்று
இன்று தமிழகத்தின் நல்லிணக்க சமூக வாழ்வையும் விட்டு வைக்கவில்லை.
இந்து மதம்
சகிப்புத் தன்மையுள்ள ஒரே மதம்
. மற்ற மதங்களை ஆக்கிரமிக்காத மதம் என்று ஒருபக்கமும், இஸ்லாமென்றாலே அமைதி, இங்கே தீவிரவாதமிற்கே இடமில்லை
என்று இன்னொரு பக்கமும் சொல்லிக் கொண்டு பழியை மற்றவர்கள் மீது சுமத்தியவாறு இன்னமும்
எத்தனை நாட்கள் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளப்போகிறோம் ?
இந்திய
இறையாண்மை இன்று கேள்விக்குறியாகியுள்ளது.
ஆட்சியைத்
தக்கவைக்க உணர்வுகளுக்கு எரியூட்டும் ஆளும் அரசியல்வாதிகளும்,
ஓட்டு அரசியலுக்காக சுய நலத்துடன் இயங்கும் எதிர்க் கட்சிகளும்
, நாட்டின் நலத்தில் அக்கறை கொண்ட சமூக இயக்கங்களும் , இந்திய இறையாண்மையைக் காப்பாற்றத் தவறினால் இன்னொரு நவகாளியை இந்தத் தலைமுறை
சந்திக்கும் அபாயம் வெகு தொலைவிலில்லை.
வேதனை தரும்
இந்த சூழியியல் நிலைமைக்கு யார் பொறுப்பேற்பது ? அகண்ட
பாரதம் என்ற இலக்கில் பயணிக்கும் அமைப்புகளின் அணியிலிருந்து ஆட்சிக்கு வந்திருக்கும்
அரசியல் ஆளுமையின் கொள்கை முடிவுகளா அல்லது சிறந்ததொரு தலைமயில்லாது , இறக்குமதி செய்யப்பட்ட ‘ வகாபியிஸம் ‘ ‘ சலாபியிஸம் ‘ மற்றும்
இந்த மண்ணில் மலர்ந்த ‘ சூபியிஸம் ‘ ஆகிய
நேரெதிர் இறை வணக்கக் கொள்கை வேறுபாடுகளால் பிளவு பட்டுக் கல்வியிலும்,
பொருளாதாரத்திலும் பின் தங்கிப்போன இஸ்லாமிய சமுதாயத்தின் பிற்போக்குத்தனமா ?
பொறுப்புக்குக்
காரணம் யாரென்ற ஆய்வைவிட , புதியதொரு நட்புக்கரம் நீட்டி , நம்பிக்கைத்துளிகளை விதைப்பதுதான்
இன்றைய காலத்தின் கட்டாயம். இதில் இந்திய இஸ்லாமிய சமுதாயத்தின்
பங்களிப்பும் , கருத்து மாற்றமும் இன்றியமையாததென்பதைச் சுட்டிக்காட்டுவதே
இந்தக் கட்டுரையின் நோக்கம்.
இந்திய
இஸ்லாமிய சமுதாயம்- பின்னணி
இந்திய
மக்கள் தொகையான 136 கோடி யில் ( 2019 ) இஸ்லாமியர்கள் 18 சதவிகிதம் , 24 கோடி பேர் வசிப்பதாக புள்ளிவிவரங்கள்
தெரிவிக்கின்றன. உலக
இஸ்லாமிய மக்கள் தொகையில் இந்தோனிஷியாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் அதிக முஸ்லீம்கள்
வாழ்கின்றனர். இது பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகைக்கு சமம். சவுதி அரேபியாவைவிட எட்டு மடங்கு
அதிகம். வளைகுடா நாடுகளின் மொத்த மக்கள் தொகையே 7 கோடிதான். இந்திய முஸ்லிம்களின் மக்கள் தொகை அமெரிக்காவின்
34 கோடி மக்களில் 72 சதவிகிதம்.
இப்படிப்
பெரும்பான்மையான ஒரு சமூகம் சிறுபான்மையினராகக் கருதப்பட்டு குறுகிப்போயிருப்பது இந்திய
வாழ்வியல் முரண். இரண்டு மூன்று சதவிகித வேலை வாய்ப்புச் சலுகைகளுக்காகத் தங்கள் சமூகத்தை சிறுபான்மை என்ற
அடைப்புக்குள் நிரந்தரமாக வைக்கப் போராடும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் சுய நலக் குறிக்கோளில்
ஒரு சமூகம் தன் தனித்துவத்தை இழந்து போகிறது. அதுமட்டுமல்லாது
இஸ்லாமிய இளைய சமுதாயம் தாங்கள் சிறுபான்மையென்ற மன அழுத்தத்தில் ஒரு வித அச்ச உணர்வோடு வளரும்போது,
அவர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்வது இலகுவாகிறது. பெரும்பான்மைச் சமூகத்திடமிருந்துப் பாதுகாப்பு தேடவேண்டிய சூழ்நிலையில் இவர்கள்
சமூக விரோதிகளிடம் பலிகடாவாகிறார்கள். இந்திய இஸ்லாமிய சமுதாயம்
முதலில் இந்த சிறுபான்மை என்ற குறியீட்டிலிருந்து வெளிவர வேண்டும். கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவை சலுகைகளாலும் இட
ஒதிக்கீட்டால் மட்டுமே பெற முடியாதென்பது இந்த எழுபதாண்டு சமூக வாழ்வின் அனுபவம்.
அரேபியாப்
பாலைவனத்தில் தோற்றுவிக்கப்பட்ட இறைத் தூதர் ஆப்ரஹாமின் மதங்களென
அழைக்கப்படும் யூதம், கிறித்துவம், இஸ்லாம்
மூன்றில் இஸ்லாம் இறுதி மதம். கி.பி ஆறாம் நூற்றாண்டில் மக்காவில் முகம்மது நபி அவர்களால்
ஓரிறைக் கொள்கையின் அடிப்படையில் புத்துருவம் கொடுக்கப்பட்ட மதம். கொலை, கொள்ளையென
அறியாமையிருளில் மூழ்கியிருந்த அரேபியர்களிடையே இஸ்லாம் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது.
இதே காலக் கட்டத்தில்தான் இந்தியாவில் குப்தப் பேரரசின் பொற்காலம் கலை,
சிற்பம், இலக்கியமென கொடிகட்டிப் பறந்தது.
கி.பி ஏழாம் நூற்றாண்டின் இறுதியில்
இஸ்லாம் அரேபிய வணிகர்களால் இந்தியாவின் மேற்குக் கரையோரங்களில் , கேரளாவின் மலபார், குஜராத்தின் கொங்கன் பகுதிகளில் அறிமுகமானது.
கேரளத்திற்கு வந்த அரபு வணிகர்கள் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை நகரங்களான,
கீழக்கரை, காயல்பட்டினம் ஆகிய ஊர்களில் தங்கி வணிகத்தோடு
இஸ்லாமியக் கருத்துக்களையும் பரப்பினர். திருமணத்தொடர்பும் தொடர்ந்தது.
இதனால்தான் கேரளத்தில் இவர்கள் “ மாப்பிள்ளை
‘ என்று அழைக்கப்பட்டனர். இங்கெல்லாம் இஸ்லாம்
உறவு முறையோடு இந்துக்களின் உணர்வுகளோடு கலந்தது . ஆனால் வட இந்தியாவோ கி.பி 12 ஆம் நூற்றாண்டிலிருந்து 17ஆம் நூற்றாண்டுவரை டெல்லி சுல்தான்கள்,
அலாவுதின் கில்ஜியின் அடிமை வம்சம், துக்ளக் மற்றும்
மொகலாய சாம்ராஜ்யங்களின் ஆளுமையில் வந்தபொழுது இஸ்லாம் இங்கே ஆட்சி அதிகாரத்தோடு பரவியது.
வட இந்தியக் கலவரங்களின் பின்னணியில் இந்த மத மாற்றக் கசப்பு மறைக்கமுடியாத
உண்மை.
இன்றைய
இந்திய முஸ்லீம்களின் மரபணுத் தொடர்பும்
தொடக்கமும் இந்திய நாட்டோடு பின்னிப் பிணைந்தது. இவர்களில் யாருமே
அரேபிய வாரிசுகளல்ல. எனவே இந்திய முஸ்லீம்களை இந்தியாவிலிருந்து
வெளியேறு என்று முழக்கமிடுவது வெறும் வெறுப்பு அரசியலேதவிர வரலாற்று உண்மையல்ல.
இந்திய இறையாண்மையின் பின்னணி;
இறையாண்மை
என்பது ஒரு தேசிய இனத்தின் மக்கள் முழுச்சுதந்திரத்துடனும் அதிகாரத்துடனும் தங்கள்
செயல்பாடுகளை நிர்வகித்துக் கொள்ளும் நிலை.
இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய அரசியல் நிர்ணய சபையின் அறிஞர்கள் முகப்புரை (
Preamble ) யின் அறிமுகப்பகுதியில் ‘ நாம், இந்திய
மக்கள் ‘ ( We, the people Of
India ) என்றே அரசியலமைப்பை தொடங்குகிறார்கள். இதன் பொருள் , இந்தியாவின் முழு இறையாண்மையை இந்திய மக்கள்
தங்களிடத்திலேயே தக்கவைத்துள்ளனர் என்பதாகும். இந்தியாவிலுள்ள
அனைத்து மொழி சார்ந்த , மதம் சார்ந்த இனங்களும் ‘ வேற்றுமையில் ஒற்றுமை காண்பதை உறுதி
செய்வதே நாட்டை வழி நடத்தும் தலைவர்களின் கடமை எனபதே இறையான்மை.
அரசியலமைப்பு 42 ஆவது சீர்திருத்தம் – 1976 – மூலமாக ‘ சமய சார்பற்ற ‘ (
Secular ) என்ற சொல் உட்படுத்தப்பட்டது. இதன் பொருள் , இந்தியா எந்தவொரு சமயத்தையும் நாட்டு சமயமாக
அங்கீகரிக்காது. மற்றும் தனி மனித சமய நம்பிக்கை , அல்லது வழிபாடு உரிமையில் எந்தவிதத்திலும் தலையிடாமல் சமமாக மதித்தலே சமய சார்பற்ற
நிலையாகும். இதனால் நாடு
சமயத்திற்கு எதிரானது என்பதல்ல. மத நம்பிக்கைகளில் நாடு நடு நிலையைப் பின்பற்றும். எந்தவொரு சமயத்தைப் பின்பற்றவோ பரப்பவோ
செய்யாது.
அரசியலமைப்பு
இத்தனைத் தெளிவாக இருந்தாலும் மைய மாநில அரசுகள் இதைப் பின்பற்றுவது கிடையாது. பெரும்பான்மையான மாநிலங்கள்
மதச் சடங்குகளை முன் வைத்து விழா வெடுக்கின்றன. இதுவரை இதை யாரும்
பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. ஆனால் சமீப கால அரசியலில் சமயத்தை
அரசு கையாளும் வேகம் சிறுபான்மை சமூகத்தை தூரப்படுத்திவிட்டது.
இதனால்
இந்திய இறையாண்மையும் மதச் சார்பற்றத் தன்மையும்
இன்று சோதனைக்குள்ளாகியுள்ளன.
சமுதாயத்தின் சவால்கள் .
இந்திய
இஸ்லாமிய சமூகத்தின் மிகப் பெரும் பலவீனம் அதனை சரியான பாதையில் வழிநடத்திச் செல்ல வலுவான தேசியத் தலைமை இல்லாததுதான்.
25 கோடி இஸ்லாமியர்களுக்கு மக்களவையில் 100 உறுப்பினர்களாவது இருக்க வேண்டும்.
ஆனால் இன்று மொத்தம் 22 உறுப்பினர்களே உள்ள பரிதாபமான
நிலை. காயதே மில்லத் இஸ்மாயில் சாஹெபிற்குப்பிறகு இங்கு சரியான
தலைமை உருவாகவில்லை. மாநில அளவில் சிலரிருந்தாலும் தேசிய அளவில்
இவர்களுக்காகக் குரல் கொடுக்க மதிப்பான தலைமையில்லை . இதனால்தான் எல்லா அரசியல் கட்சிகளுமே
வாக்கு வங்கிக்காக முஸ்லீம்களைப் பந்தாடி வருகிறார்கள் .
இஸ்லாமிய
சமுதாயத்தின்இன்னொரு பெரிய சவால் மதம் சார்ந்த கொள்கைகளையும் திருக்குரான்
விளக்கும் சட்டங்களையும் சரியான நோக்கில் சமுதாயத்திடம் கொண்டு சேர்க்க இயலாத
, உலேமா எனப்படும் சமயப் பேரறிஞர்களின் தெளிவில்லாகுழப்ப நிலை.
இஸ்லாமிய சமுதாயம் மற்ற மதங்களைவிட மதக் கட்டுப்பாடுகளை தினசரி வாழ்விலும்
பின்பற்றும் சமூகம். ஷரியத் எனப்படும் இறைவனின் சட்டங்களை சாதாரண
அடித்தட்டு மக்களிடம் தவறோ, திரிபோ இல்லாது கொண்டு சேர்ப்பதில்
சமய அறிஞர்களுக்கிடையே தெளிவில்லாத நிலை.
முத்தலாக் எனப்படும் மண முறிவுப் பிரச்னையில் , மைய அரசு மற்றும் உச்ச நீதி மன்றத்தின் முடிவுகளுக்கு இவர்களால் சரியான நியாயத்தை
எடுத்து வைக்க இயலவில்லை. இன்று வரை மணமுறிவு வரைமுறைகளை இந்த
அறிஞர்கள் அமைப்பு இஸ்லாமிய சமுதாயத்திடம் கட்டாயப்படுத்தி வழிகாட்ட முடியவில்லை.
சவுதியிலிருந்து
இறக்குமதியான இஸ்லாமிய தூய்மைவாதம்,
தர்கா வழிபாடு , பாபரி மசூதி, மாற்று மதங்களுடன் நல்லிணக்கம் , மதரஸா கல்வி,
பெண்கள் வேலை போன்ற சமூகப் பிரச்னைகளை எதிர்கொள்வதில்
சரியான வழிகாட்டுதலில்லாததால் , இந்த சமுதாயத்தின் இளைஞர்கள்
திசை மாறிப் போகிறார்கள். எதிர்மறை எண்ணங்கள் மிக எளிதாக விதைக்கப்
படுகின்றன. இளைய சமுதாயத்தின் இந்த மாற்றம் சமுதாயத்தின் மிகப்
பெரும் சவால்.
திரு மன்மோகன்
சிங் ஏற்படுத்திய சச்சார் குழுவின் ஆய்வறிக்கை இஸ்லாமிய சமுதாயத்தின் பிற்போக்கை அதிர்ச்சி தரும்
புள்ளி விவரங்களுடன் வெளிக்கொணர்ந்தது. தலித்துகளை விட இவர்கள் பிற்போக்காக இருப்பதை சுட்டிக்காட்டியும் இஸ்லாமிய
தலைவர்கள் விழித்துக் கொள்ளவில்லை . மதக் கல்வியோடு நின்று விடாமல்
உலகக் கல்வியிலும் முன்னேறாதவரை இந்தப் பிற்போக்குத்தனம் மாறப்பொவதில்லை . தீவிரவாதிகளென்றும், பயங்கரவாதிகளென்றும் குத்தப்படும் முத்திரைகளும் நிற்கப்போவதில்லை.
ஆட்சி அமைக்கும்
எந்த அரசும் 24 கோடி பெரும்பான்மையான
இந்த இஸ்லாமிய சமுதாயத்தை வாக்கு வங்கியாகவோ, மாற்று நாட்டினராகவோ
கருதாமல் தேசீய நீரோட்ட்த்தில் இணைத்துப் போவதே நாட்டின் இறையாண்மைக்கு உகந்தது.
------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment